உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 10, 2012

பெருமாள் ஏரியிலிருந்து நாகார்ஜூனா ஆயில் நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

கடலூர் : 

      பெருமாள் ஏரியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி 11 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

      கடலூர் அடுத்த குண்டியமல்லூரில் உள்ள பெருமாள் ஏரி மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இப்பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள இந்த ஏரி உரிய பராமரிப்பு இல்லாததாலும், என். எல்.சி., சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரில் அடித்து வரும் மணல் மற்றும் நிலக்கரி சகட்டினால் ஏரியின் பெருமளவு தூர்ந்ததால் தற்போது ஒரு போகம் நெல் பயிரிடவே தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் ஏரியை தூர் வாரி கொள்ளளவை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

       இந்நிலையில் திருச்சோபுரத்தில் செயல்படவுள்ள நாகார்ஜூனா ஆயில் நிறுவனம், தங்களது தண்ணீர் தேவைக்கு பெருமாள் ஏரியிலிருந்து தினசரி 1.8 மில்லியன் காலன் (ஒன்றரை கோடி லிட்டர்) தண்ணீரை குழாய் மூலம் எடுத்துச் செல்ல பொதுப்பணித் துறையிடம் அனுமதி கோரியது. அதன்பேரில், குறிஞ்சிப்பாடி தாசில்தார் கடந்த நவம்பர் 24ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இருப்பினும் நாகார்ஜூனா ஆயில் நிறுவனம் தனது தேவைக்கு தண்ணீர் எடுப்பதற்காக பெருமாள் ஏரிக்கரையில் வருவாய்த் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவீடு செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

        அதனைத் தொடர்ந்து பெருமாள் ஏரி மூலம் பாசன வசதி பெறும் ஆதிநாராயணபுரம், தீர்த்தனகிரி, பூவாணிக்குப்பம், வாண்டியாம்பள்ளம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், சிறுபாலையூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் நேற்று மாலை கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரனை சந்தித்து மனு கொடுத்தனர்.

     அதில், 11 ஊராட்சிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் பெருமாள் ஏரியிலிருந்து நாகார்ஜூனா ஆயில் கம்பெனி தண்ணீர் எடுக்க உள்ளதாக கடந்த நவம்பர் மாதம் குறிஞ்சிப்பாடி தாசில்தார் அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதே தாசில்தாரிடம் மனு கொடுத்தோம். அதனை மீறி மறுபடியும் பெருமாள் ஏரி ஓரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுத்தால் இப்பகுதியில் நீர் ஆதாரம் முழுமையாக பாதிக்கும். மேலும், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து கடல் நீர் உட்புகும் வாய்ப்பு உள்ளது. விவசாயத்தையும், பொதுமக்களையும் பாதிக்கும் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டனர். மனுவை பெற்ற கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior